தேவாலய தொண்டூழிய மூத்த பெண்களுக்கு சிறப்பு சான்றிதழ்
செந்தூல், புனித யோசேப்பு தேவாலயத்தில் கடந்த 11.3.2018ஆம் தேதி அனைத்துலக மகளிர் தினம், பங்குத் தந்தை ஜோர்ஜ் பாக்கியசாமி அவர்களின் ஆதரவோடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இறைவனுக்குத் தொண்டு செய்வதென்பது மாபெரும் பணி. அப்பணியை சிரமேற்கொண்டு செய்து வருவதில், அக்கறையும் பொறுப்புமிக்கவர்களாகவும் திகழ்வதென்பது பெருமைப்படக்கூடிய விசயமாகும். அவ்வகையில், புனித யோசேப்பு தேவாலயத்தில் இயங்கி வரும் மகளிர் அமைப்பு, தேவாலயத்தில் நீண்ட காலமாக பல பணிகளில் ஈடுபட்டு வந்தவர்களுக்கும் மேலும் பொது சேவைகள் புரிந்தவர்களுக்குமாக இருபது மூத்த பெண்மணிகளுக்கு சிறந்த நற்சான்றிதழ் வழங்கி சிறப்பித்தது. அழைக்கப்பட்டவர்கள் பலராக இருந்தாலும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே இயேசுவின் சீடர்கள்போல் பணிமேற்கொண்டு வந்தவர்களுக்கு ஒரு சிறப்பு அங்கீகாரமாக இத்தினம் திகழ்ந்தது என்றால் மிகையாகாது. தற்போது இறைப்பணியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் இளைய தலைமுறையினருக்கும் முன்மாதிரியாகவும் எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறார்கள்.
கடந்த 29.11.2015ஆம் தேதி தோற்றம் கண்ட இந்த மகளிர் அமைப்பு சிறந்த முறையில் பணிகளை மேற்கொண்டு வருகிறது. மக்களின் நலன் கருதி, இந்த அமைப்பின் தலைவி திருமதி லூட்ஸ்மேரி அவர்களின் வழிகாட்டுதலில் 2016ஆம் ஆண்டு தையல் பயிற்சி வகுப்பு ஆரம்பித்து வெற்றி பெற வழிவகுத்தது. மார்பகப் புற்றுநோய் பரிசோதனைக்கு ஏற்பாடு செய்து, பல பெண்கள் இச்சோதனைக்கு உட்பட்டு பலன் பெற்றார்கள். 2017ஆம் ஆண்டு கண் பரிசோதனை செய்வதற்கு ஏற்பாடு செய்து துன் ஹுசேன் ஓன் மருத்துவமனையில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு பலர் பலனடைந்தனர். இவ்வாண்டு (2018) துவக்கத்தில் அனைத்துலக பெண்கள் மகளிர் தினத்தைக் கொண்டாடிய அதே வேளையில், மார்பகக் புற்றுநோய் சோதனைக்கும் ஏற்பாடு செய்துள்ளது. அன்றைய தினத்தில் இதற்கான பதிவும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இறைவனின் வழி நடத்துதலில், சொல்லும் செயலும் ஒன்றரக் கலந்து செயலாற்றுவதில் அதீத கவனம் கொண்டு இயங்கி வருகிறது இம்மகளிர் அமைப்பு.
இந்த மகளிர் அமைப்பின் நோக்கம் சட்டமியற்றுதல், கற்பித்தல், ஆற்றல் அளித்தல், பரிந்து பேசுதல் ஆகிய கோட்பாட்டோடு இயங்கி வருகிறது. மனிதநேயத்தைக் கருத்தில் கொண்டு, ஒற்றுமையோடு ஒருங்கிணைந்த கரங்களோடு இறைவனுக்கு தொண்டு செய்ய கரங்களை உயர்த்தியுள்ளனர். ஒற்றுமையே பலம்…! ஒருவனே தேவன்! உமக்கே மாட்சி! உமக்கே புகழ்! உமக்கே நன்றி !
எஸ். ஜீவா.
You must be logged in to post a comment.