தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். தமிழ் மாதங்களில் தனிச் சிறப்பு வாய்ந்த மாதங்களில் முக்கியமானது தை.
தை மாதத்தின் பிறப்பை அறுவடைத் திருநாளாக, பொங்கல் தினமாக உலகத் தமிழினம் கொண்டாடி வருகிறது. தமிழ்ப் புத்தாண்டின் முதல் நாளாகாவும் இந்த நாள் ஆரம்பத்தில் கொண்டாடப்பட்டது. இடையில் சித்திரைக்கு மாறிப் போனது. இப்போது மீண்டும் தை முதல் நாளை புத்தாண்டின் முதல் நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில், இந்த ஆண்டு தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு தினமாகவும் கொண்டாடப்படுகிறது.
தமிழர் திருநாள்…
தைப் பொங்கல், அறுவடைத் திருநாள் என கூறப்படும் பொங்கல் பண்டிகை, தமிழர் பண்டிகை ஆகும். பொங்கல் என்பதற்கு சாப்பிடும் பொங்கல் என்று பொருள் அல்ல. பொங்கிப் பெருகி வருவது என்று பொருள்.
தமிழர்கள் இருக்குமிடமெல்லாம் பொங்கல் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. தமிழர்களின் தாயகமான தமிழ்நாட்டில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை, மலேசியா, கனடா, சிங்கப்பூர், இலங்கை, மொரீஷியஸ் உள்ளிட்ட அனைத்து உலக நாடுகளிலும் கூட விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
மலேசியா,இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் பொங்கல் பண்டிகையன்று அரசு விடுமுறையும் கூட விடுகிறார்கள்.
4 நாள் விழா…
பொங்கல் பண்டிகை மொத்தம் 4 நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. முதல் நாள் போகி பண்டிகை, அடுத்த நாள் பொங்கலிடும் நாள், 3வது நாள் மாட்டுப் பொங்கல், 4வது காணும் பொங்கல் அதாவது உறவினர்களை சந்திப்பதாகும்.
நமக்கு காலமெல்லாம் கை கொடுத்து உதவும் மழை, சூரியன், விவசாயத்திற்குப் பயன்படும் கால்நடைகள் ஆகியவற்றுக்கு நன்றி கூறும் நல் வாய்ப்பாக இந்த திருநாள் அமைகின்றது.
வீட்டுப் பொங்கல்…
தை மாதப் பிறப்பு நாள் இது. சர்க்கரைப் பொங்கல் என்று இந்த பண்டிகைக்குப் பெயர்.
புதுப்பானை எடுத்து, மஞ்சள் உள்ளிட்டவற்றை பானையைச் சுற்றிக் கட்டி, புதுப் பாலில், புது அரிசியிட்டு, வெல்லம் உள்ளிட்டவற்றைக் கலந்து பொங்கலிடுவார்கள்.
வீட்டுக்கு வெளியே சூரியன் இருக்கும் திசையை நோக்கி இந்த பொங்கலிடும் நிகழ்ச்சி நடைபெறும்.
அரிசி நன்கு சமைந்து, பொங்கி வரும்போது குலவையிட்டும், பொங்கலோ பொங்கல், பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக என்ற குரலோடு பொங்கல் பானையை இறக்க வேண்டும்.
நன்கு பொங்கி வந்தால் அந்த ஆண்டு முழுவதும் நல்ல வளமும், நலமும் நிலவும் என்பது ஐதீகம்.
கடந்த 15/01/2017 நமது செந்தூல் புனித யோசேப்பு தேவாலயதில் மிக விமரிசையாக பொங்கல் நிகழ்சி நடைபெற்றது .
காலையில் பொங்கல் திருப்பலியை நமது பங்கு தந்தை நிறைவேற்றினார்.
தேவாலயத்தில் அதிகாலை 5.30 மணியளவில் பொங்கல் வைக்கப்பட்டது. அதை தொடர்ந்து பொங்கல், கரும்பு, பலகாரங்கள், பழம், நவதானியங்கள், அரிசி, போன்றவைகள் காணிக்கையாக்கபட்டன.
அதை தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு மண்டபத்தில் பொங்கல் கலை இரவு மிக சிறப்பாக நடைபெற்றது. நமது பேராயர் ஜூலியன் தலைமையில் இந்நிகழ்ச்சி தொடக்கி வைக்கப்பட்டது. பேராயர் மற்றும் நமது பங்குத்தந்தை ஜோர்ச் பாக்கியசாமி ஆகியோரை மேள தாளம் மற்றும் நாதஸ்வர இசையோடு வரவேற்றனர். ஆவர்கள் குத்து விளக்கை ஏற்றி வைத்து நிகழ்ச்சியை தொடக்கி வைத்தனர்.
அதைத் தொடர்ந்து பரதநாட்டியம், மயிலாட்டம், கோலாட்டம், புலியாட்டம் போன்ற பாரம்பரிய நடனங்கள் நடந்தேறின. நமது பங்குப் பாடல்குழுவின் லூயிஸ் அவர்களின் தலைமையில் சிறப்பான பொங்கல் பாடலை வழங்கினர். தொடர்ந்து சுவையான உணவும் பொங்கலும் பரிமாறப்பட்டது. 400 பேர் எதிர்பார்க்கப்பட்ட போதிலும் ஏறக்குறைய 550 மக்கள் வருகைபுரிந்திருந்தனர்.
சிறப்பு விருந்தினராக நமது மண்ணின் மைந்தன் லோக்கப் நாதன் வருகைதந்திருந்தார். இவர் நம் பங்கு தந்தையின் நெருங்கிய நண்பருமாவார். இரு பாடல்களை மிகவும் சிறப்பாக பாடியிருந்தார் மக்கள் இவரின் பாடலுக்கும் ஆரவாரம் செய்து கைதட்டி மகிழ்ந்தனர். இப்பாடலுக்கு நமது பங்கு இளைஞர்கள் அதிரடி நடனமும் ஆடி மகிழ்ந்தனர்.
அதைத் தொடர்ந்து அதிஷ்ட குலுக்கலும் நடைபெற்றது. சிறந்த குட்டி சுட்டி, சிறந்த ஆண், பெண், மாமி, குடும்பம் போன்ற பல வகை அதிஷ்ட குலுக்கலுக்கு பரிசு கொடுக்கப்பட்டது. இதனை பேராயரும் நிகழ்ச்சியின் தலைவர் ஜோனும் எடுத்து வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து நிறைய பாடல்கள், நடனங்கள் நம் பங்கு இளைஞர்கள் வழங்கியிருந்தனர். இந்நிகழ்ச்சி மிகவும் விமரிசையாக இரவு 10.30 மணியளவில் நிறைவெய்தியது.
ஜெனிபர் பேதுரு.