இன்றைய உவமை ஒரு அரச திருமண நிகழ்வு பற்றியதாகும் (மத் 22:1-14). புதிய திருமண தம்பதியருடைய வாழ்வில் திருமணம் மகிழ்ச்சியும் அக்களிப்பும் கொண்ட ஒரு நாளாகும்.
நான் கடந்த வாரம் வியாழக்கிழமை (8.10.2020) ஒரு திருமணத்தையும் சனிக்கிழமை (10.10.2020) மற்ற இரண்டு திருமணங்களை புனித யோசேப்பு ஆலயத்தில் நடத்தியிருந்தேன். உண்மையில், ஆலயத்தின் அளவுக்கேற்ப திருமணத்தில் கலந்து கொள்ளும் விருந்தினர்களின் எண்ணிக்கையை 100 பேராக அதிகரிக்க திருமண தம்பதியருக்கு அனுமதியளித்திருந்தேன். இந்த எண்ணிக்கை அதிகரிப்பால் தம்பதியர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். அதேவேளை 6.10.2020 அன்று கிள்ளான் பள்ளத்தாக்கிற்கு உட்பட்ட பங்குகளில் இரண்டு வாரத்திற்கு மறு அறிவித்தல் வரும்வரை திருப்பலி இடைநிறுத்தப்படுகின்றது என்ற மறைமாவட்டத்தின் அறிவிப்பு வந்தது. இந்த குறிப்பில், திருப்பலிக் கொண்டாட்டம் மற்றும் நிகழ்வுகளுக்கான வழிகாட்டல்களைப் படித்திருந்தோம், சிறப்பாக திருமணக் கொண்டாட்டத்திற்கு 20 விருந்தினர் மட்டுமே அனுமதிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
நான் தம்பதியருக்கு அறிவித்த போது அவர்கள் உண்மையில் ஏமாற்றமாக இருந்தார்கள். அவர்கள் ஏற்கனவே விருந்தினருக்கான அழைப்பை அதிகரித்துள்ளதாக கூறினார்கள். இதை அவர்களின் விருந்தினருக்கு திருமணத்தின் ஓரிரு நாட்களுக்கு முன்னர் அறிவிப்பதில் ஒரு சங்கடமான நிலைக்கு உள்ளானார்கள். இறுதியில் இறுக்கமான இதயத்துடன் நெருக்கமான குடும்ப அங்கத்தவர்களுக்கான விருந்தினர் பட்டியலை உறுதிப்படுத்தினர். இவர்களையே “தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்” என அழைப்போம்.
இது இன்றைய நற்செய்தி கூறுவதைப் போன்றது, “பலர் அழைக்கப்படுகிறார்கள், ஆனால் சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.” தேர்வு என்பது அழைக்கப்பட்டவர், தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்டவர் என்று பொருள். அழைப்பிற்கு “மறுப்பு” என்று நாம் கூறும்போது, அது ஒரு அவமானம், அவமதிப்பு மற்றும் சங்கடமாக இருக்கும். ஓரளவிற்கு, அவ்வாறு செய்வது நமக்கு நல்லதல்ல. கடவுளின் இதயம் யாரையும் விலக்கவில்லை, இவை அனைத்தையும் உள்ளடக்கியது. கடவுளின் அருளே நம்மை காப்பாற்றுகிறது. திருமண விருந்தில் சேர்க்கப்பட வேண்டிய அனைவரையும் கடவுள் தேர்வுசெய்து தேர்ந்தெடுத்துள்ளார். கடவுளின் இதயத்தில், எல்லோரும் அழைக்கப்படுகிறார்கள், அனைவரும் வரவேற்கப்படுகிறார்கள், திருமண கொண்டாட்டத்திற்கு சிலர் மட்டுமே பதிலளித்திருப்பார்கள்.
பலர் அழைக்கப்படுகிறார்கள், ஆனால் சிலர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்! கடவுளின் அழைப்பிற்கு எங்கள் பதில் என்ன? கடவுள் நம் ஒவ்வொருவரையும் அழைக்கிறார். நம் வாழ்வில் பல விடயங்களில் நாம் ஆர்வம் காட்டுகிறோம். பெரும்பாலும், குறிப்பாக இந்த இலக்கவியல் உலகில் அவருடைய அழைப்பில் கவனம் செலுத்தாமல், அக்கறையற்றவர்களாக இருக்கிறோம். நாம் கவனம் செலுத்தாமல், கடவுளின் அழைப்பைப் புறக்கணிக்கும்போது, நாம் இனி அவருடைய விருந்துக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. நம்முடைய கவலைகள் மற்றும் குழப்பங்களைப் பார்க்காமல் நம்பிக்கையுடன் அவருடைய அழைப்பிற்கு பதிலளிக்க ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் நாம் பயன்படுத்தினால், கடவுளின் திட்டம் நம் வாழ்வில் நிறைவேறுவதைக் காணலாம்.
இந்த இரண்டு நாட்களில் நமது பங்கில் நடந்த மூன்று திருமணங்களின் கதை மற்றும் உவமையைப் பார்க்கும்போது, அழைப்பு நம்முடைய நன்மையால் தீர்மானிக்கப்படவில்லை ஆனால் கடவுளின் மிகுந்த அருளாலே என்பதை
நாம் புரிந்து கொள்ள வேண்டும், கடவுள் இன்னும் நம்மை அழைக்கிறார். இந்த மண்ணுலகில் வாழ்க்கையை நன்றியுடன் கொண்டாட கடவுள் நம்மை அழைக்கிறார். இந்த மண்ணுலக வாழ்க்கைக்குப் பிறகு, நிலையான விருந்துக் கொண்டாட்டத்திற்காக விண்ணகத்திற்குள் நுழைய அவர் நம்மை அழைக்கிறார். இந்தக் குறுகிய கால மண்ணுலக வாழ்க்கையில் அனைத்து புனிதர்களின் ஒற்றிப்புடன் நிலையான விருந்துக்காக எதிர்நோக்குகையில், நாம் தொடர்ந்து மாற்றத்திற்கும் மனந்திரும்புதலுக்கும் உட்படுத்தப்பட வேண்டும்.
அவருடைய அழைப்பிற்கு முழு மனதுடனும் உண்மையுடனும் பதிலளிப்பதற்கான ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்துவதை நாம் புறக்கணிக்கவும் கூடாது, மந்தமாக இருக்கவும் கூடாது. நாம் செய்ய வேண்டியது எல்லாம் கடவுளின் அழைப்பை ஏற்று, நமது திருமண ஆடைகளை கிறிஸ்துவுடன்
அணிந்துகொண்டால்தான் நாம் நிச்சயமாக அவருடைய ஆட்சிக்கு உட்படுத்தப்படுவோம்.
அருட்தந்தை ஜோர்ஜ் பாக்கியசாமி
பங்குத்தந்தை
புனித யோசேப்பு ஆலயம்
செந்தூல், கோலாலம்பூர்.
மொழிபெயர்ப்பு:
சூ. யூ. யூலியன்
You must be logged in to post a comment.