
மனிதர்கள் உயிர்வாழ உணவு இன்றியமையாதது. அந்த உணவை உற்பத்தி செய்பவர்கள் விவசாயிகள், அதிலும் அதிகமானவர்களின் அத்தியாவசிய உணவாக இருப்பது நெல் அரிசி சோறு. அதே போல தமிழர்களின் பாரம்பரிய உணவாக இருப்பதும் இதுவாகும். எல்லாமே கடவுளின் படைப்பு. ஆயினும் அவற்றை பயன்படுத்தவும் பலன்பெறவும் மனித உழைப்பு மிக அவசியமானதாக இருக்கின்றது. உழவர்கள் இரவு பகல் பாராது நெற்றி வியர்வை சிந்தி தமது உடல் உழைப்பினால் நெல் நன்றாக விளையவும் அதன்வழியாக மக்களுக்கான உணவு கிடைக்கவும் வழியாகின்றார்கள். இவர்களுக்கு நன்றி செலுத்த வேண்டியது உலக மக்களின் கடமையாக இருப்பதுடன் அவர்களை மதிக்கவும் அவர்களுக்கு உதவி செய்யவும் அனைவரும் முன்வரவேண்டும்.
ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் விழா தமிழ் மக்களால் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கமாகும். இருந்தபோதிலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொற்றுநோய் பரவல் ஏற்பட்டதால் நிகழ்வுகளை நடத்தமுடியாத சூழ்நிலை உருவாகியிருந்தது. எல்லாவற்றையும் கடந்து இந்த 2023 ஆம் ஆண்டு கடவுளின் மிகுந்த ஆசீரால் நாம் அனைவரும் மீண்டும் ஒன்றுகூடி கொண்டாட்டங்களை நடத்தக்கூடியதாக அமைந்துள்ளது.
இந்த ஆண்டு பொங்கல் விழா செந்தூல் புனித யோசேப்பு ஆலயத்தில் பங்குத் தந்தை அருள்பணி ப்ரெட்ரிக் யோசேப்பு அவர்களின் தலைமையில் தமிழ் அப்போஸ்தலர் பணிக்குழு, இளைஞர்கள் பணிக்குழு மற்றும் பங்கு மக்கள் ஒன்றிணைந்து பொங்கல் விழா பண்பாட்டு கலைகள், உடைகள் மற்றும் உணவுப் பரிமாறலுடன் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
மாலை 4.15 மணிக்கு பொங்கல் பானைகள் பங்குத் தந்தையால் ஆசீர்வதிக்கப்ட்டு பானையில் பால் ஊற்றியதைத் தொடர்ந்து 10 குடும்பங்களால் தனித் தனியாக 10 பானைகளில் பொங்கல் சமைக்கப்பட்டது. இதில் புனித யோசேப்பு ஆலயப் பங்கைச் சேர்ந்த குடும்பங்கள் மற்றும் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த குடும்பங்களும் இணைந்து பொங்கல் சமைத்தார்கள். தொடர்ந்து 4.30 மணியிலிருந்து 5.30 வரையும் பண்பாட்டுக் கலைகளான மயிலாட்டம், கோலாட்டம் மற்றும் உறுமி மேளம் உட்பட பல கலைகள் நடைபெற்றதுடன். 5.30 மணிக்கு பங்குத்தந்தை அருள்பணி ப்ரெட்ரிக் யோசேப்பு அவர்களால் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து நன்றிப்பாடலுக்கு பரநாட்டியம் ஆடப்பட்டதுடன் திருப்பலியைத் தொடர்ந்து பங்கு மக்களால் தயாரிக்கப்பட்ட இரவு உணவு விருந்தளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பேரருட்தந்தை ஜேம்ஸ் ஞானப்பிரகாசம் அவர்கள் பங்கெடுத்திருந்ததுடன் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் திருவாளர் பிரபாகரன் அவர்களும் பங்கெடுத்து பங்கு மக்களுக்கு தனது பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்திருந்தார். ஐந்நூறிற்கும் மேற்பட்ட மக்கள் பங்கெடுத்த பொங்கல் கொண்டாட்டம் இரவு 9.00 மணியளவில் நிறைவடைந்தது.
ஆக்கம்: சூ. யூ. யூலியன்
You must be logged in to post a comment.