புனித யோசேப்பு ஆலயத்தில் நாட்டின் சுதந்திர நாள் மற்றும் பங்குக்குருவானவர் அருட்தந்தை ப்ரெட்ரிக் யோசேப்பு அவர்களின் 22ஆவது குருத்துவ ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம்.
31 ஆகஸ்டு 2022 அன்று மலேசியா சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகள் நிறைவு நாளை முன்னிட்டு புனித யோசேப்பு ஆலயத்தில் காலை 9.00 மணிக்கு திருப்பலி பங்குக்குருவானவர் தலைமையில் பேரருட்தந்தை ஜேம்ஸ் ஞானப்பிரகாசம் அவர்களும் இணைந்த நிலையில் கொண்டாடப்பட்டது. பல மொழிகளை உள்ளடக்கியதாக நடைபெற்ற இத்திருப்பலியில் மியன்மார், இலங்கை, பாகிஸ்தான் மற்றும் பல நாடுகளில் இருந்து வந்து அகதிகளாகவும் குடியேறிகளாகவும் நம் நாட்டில் வாழ்கின்ற கத்தோலிக்க மக்களும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
திருப்பலி தொடங்க முன்னர் 35 அதிச தலைவர்கள் ஒவ்வொருவரும் அவர்களது அதிச விற்கான பெயர் கொண்ட புனிதர்களின் பதாகைகளைத் தாங்கி ஆலய முற்றத்திலிருந்து பவனியாக ஆலயப்பீடம் வரை சென்றார்கள். அதன் பின்னர் திருப்பலி வேளையில் அவர்கள் பங்குக் குருவானவர் முன்னிலையில் உறுதிமொழியும் எடுத்து தமது வாக்குறுதிகளைப் புதுப்பித்திருந்தமை மிகச் சிறப்பான நிகழ்வாக அமைந்திருந்தது.
திருப்பலியைத் தொடர்ந்து பங்கு மேய்ப்புப்பணிக் குழு தலைவர் திரு கபிரியேல் மோசஸ் அவர்களால் உரை நிகழ்த்தப்பட்டதுடன் தேசிய கீதம் இசைக்கப்பட தேசியக்கொடியேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து பங்கு மண்டபத்தில் பங்குக்குருவானவர் அருட்தந்தை ப்ரெட்ரிக் யோசேப்பு அவர்களின் 22ஆவது குருத்துவ திருநிலைப்படுத்தல் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம் செல்வி ஜெரோமியா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்குக்குருவானவர் கேக் வெட்டி நிகழ்வைச் சிறப்பித்திருந்தார். தொடர்ந்து பங்கு மக்களின் நன்றியுரைகள் மற்றும் பாராட்டு சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டது. இவ்வாண்டு சுதந்திர நாள் கொண்டாட்டம் ஆலயவளாகத்தில் நடைபெற்ற போது மக்கள் கைகளைத் தட்டி ஆரவாரம் செய்ததுடன் தமது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி இருந்தார்கள். பின்னர் இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் கேக் மற்றும் உணவு பரிமாறப்பட்டதுடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.
ஜூலியன் ராஜ் மூலம்