திருவருகைக்காலம் 29 நவம்பர் 2020 அன்று தொடங்கியது, நாங்கள் இறுதி கிறிஸ்துமஸ் காலத்தில் இருக்கிறோம் – இது ஆண்டவரின் திருமுழுக்கு நாளான 2021 ஜனவரி 10 அன்று கொண்டாடும் வரை நீடிக்கும். இந்த கிறிஸ்துமஸ் பலருக்கு பல்வேறான உணர்வுகளில் ஒன்றாக இருக்கப்போகிறது, ஏனென்றால் நற்கருணை கொண்டாட்டத்தில் நாம் இன்னும் பங்கேற்க முடியவில்லை, ஏனெனில் கொவி-19 தொற்று எண்ணிக்கை அதிகரித்ததால், குறிப்பாக கிளாங் பள்ளத்தாக்கில் சந்தேகிக்கப்படுவதால் கோலாலம்பூர் மறைமாவட்டத்தில் உள்ளவர்களுக்கு நற்கருணை கொண்டாட்டம் இல்லாமல், 2020 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் நிச்சயமாக வரலாற்றில் இடம்பிடிக்கும். 2021 ஆம் ஆண்டில் கடவுளின் கருணை மற்றும் இரக்கத்துடன் புதிதாக தொடங்க முடியும் என்று நம்புவோம்.
நம் அனைவருக்கும், இந்த கிறிஸ்துமஸ் மற்ற எல்லா ஆண்டுகளிலிருந்தும் வேறுபட்டதாக இருக்கும், நம்மில் பலருக்கு, கிறிஸ்துமஸ் திருப்பலியின் போது நாம் ஆலயத்திற்கு செல்லாமலும் நற்கருணை பெறாமலும் இருப்பது இதுவே முதல் முறையாகும். ஆம்! எனது மக்கள் இல்லாமல் ஆலயப்பீடத்தில் திருப்பலியை நான் தனியாக கொண்டாடுவதால், இது எனக்கு ஒரு வித்தியாசமான உணர்வாக இருக்கும். ஒவ்வொரு கிறிஸ்துமஸ் விழிப்புத்திருப்பலியிலும் நான் பெறும் உணர்வு எனக்கு இன்னும் நினைவிருக்கிறது; நான் எப்போதுமே குறிப்பாக கிறிஸ்துமஸ் கீதங்கள் பாடும்போது – “ஹர்க்! ஹெரால்ட் ஏஞ்சல்ஸ்” அதிகமாக உணர்கிறேன், தவிர்க்க முடியாமல், பாடகர் குழுக்களின் பாடல்கள் இந்த ஆண்டு நமது தேவாலயத்தில் எதிரொலிக்காது, மேலும் அழகாக அலங்கரிக்கப்பட்ட ஆலய வளாகத்தை நமது பங்குமக்களால் பாராட்ட முடியாது.
இருப்பினும், இந்த நிலைமை மற்றும் சூழ்நிலை இருந்தபோதிலும், நாம் இன்னும் நம் வாழ்க்கையைத் தொடர வேண்டும், நம்முடைய மீட்பரின் வருகையே இந்தக் காலத்திற்கான காரணம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, கிறிஸ்துமஸின் உண்மையான அர்த்தத்தை நாம் மறந்து விடக்கூடாது. நெருங்கிய குடும்பத்தினருடன் வீட்டிலேயே கொண்டாடுங்கள், கடவுளின் அனைத்து ஆசீர்வாதங்களுக்காகவும் வேண்டுதல் செய்து நன்றி செலுத்துங்கள், அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட எஸ்.ஓ.பிகளை கண்டிப்பாக கடைப்பிடித்து பாதுகாப்பாக இருங்கள்.
இந்த கிறிஸ்துமஸ் நாளன்று எனது அன்பான பங்குமக்களுக்கு சில நல்ல செய்திகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். சமீபத்தில் வேண்டுதல் செய்து தியானித்தபின், டிசம்பர் 11, 2020 அன்று பேராயர் ஜூலியன் லியாவுக்கு ஒரு கடிதம் எழுதினேன், செந்தூல் புனித யோசப்பு தேவாலயத்தை திருப்பயணம் செய்யும் பங்காக அறிவிக்கும்படி கேட்டுக்கொண்டேன். அவர் இதற்கு அனுமதித்து, கத்தோலிக்க திரு அவையின் பாதுகாவலராக புனித யோசப்பு அறிவிக்கப்பட்ட 150 வது ஆண்டுவிழாவை முன்னிட்டு, 2021 ஆம் ஆண்டிற்கான ஒரு திருப்பயண நிலையமாக நமது பங்கை நியமித்துள்ளார். டிசம்பர் 8, 2020 முதல் 2021 டிசம்பர் 8 வரை புனித யோசப் ஜூபிலி ஆண்டை திருத்தந்தை பிரான்சிஸ் அறிவித்திருந்தார்.
எனவே, என் அன்பான பங்குமக்களே, இது நமக்கு மற்றொரு பரபரப்பான ஆண்டாக இருக்கும்! இது நமது பங்கை மறுசீரமைக்கவும், அதை அதிக உயரத்திற்கு கொண்டு செல்லவும் ஒரு வாய்ப்பாக இருக்கும்! மக்களின் பல்வேறு நடவடிக்கைகளுக்கும் நமது தேவாலயத்தை மீண்டும் திறக்கத் தொடங்கியதும், பங்குமக்கள் ஆற்றல் மிக்கவர்களாகவும், உற்சாகமாகவும், பல்வேறு பணிக்குழுக்கள், அமைப்புகள் மற்றும் செயல்பாடுகளில் ஈடுபட உந்துதல் பெறுவார்கள் என்று நம்புகிறேன். புனித யோசேப்பு ஆண்டைத் தொடங்கும்போது குறிப்பாக திருப்பயணிகள் பற்றி நாம் மனதில் கொள்ள வேண்டிய இரண்டு முக்கிய வார்த்தைகள், – வரவேற்பு மற்றும் விருந்தோம்பல். 1908 முதல் புனித யோசேப்பு நமது பங்கின் பாதுகாவலராக இருந்து வருகிறார், எனவே புனித யோசப்பின் நற்பண்புகளை தொடர்வதுடன் வேண்டுதல் செய்து பின்பற்றுவோம், அவருடைய பரிந்துரையின் வழியாக அவர் நமது பணிகளுக்கு வெற்றியைக் பெற்றுக் கொடுப்பார்.
இந்த வேளையில், உங்கள் அனைவருக்கும் ஆசீர் நிறைந்த மற்றும் புனிதமான கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். கடவுளின் நல்ல பரிசுகளான, ஏராளமான மகிழ்ச்சி மற்றும் விண்ணக அமைதி ஆகியவற்றால் உங்கள் வாழ்க்கை நிரம்பட்டும். “இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு ஒளிதரவும்,
நம்முடைய கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யவும் நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும் விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடிவருகிறது. ”
(லூக்கா 1: 78-79).
அருட்தந்தை ஜோர்ஜ் பாக்கியசாமி
பங்குத்தந்தை
புனித யோசேப்பு ஆலயம்
செந்தூல், கோலாலம்பூர்.
மொழிபெயர்ப்பு:
சூ. யூ. யூலியன்
You must be logged in to post a comment.