இன்று திரு அவை மூவொரு கடவுள் பெருவிழாவை கொண்டாடுகிறது. கிறிஸ்தவ நம்பிக்கையின் மையமும் உண்மையுமான மறைபொருளாகிய மூன்று ஆட்கள் ஒரு கடவுள் என்ற பிரிக்க முடியாத ஒன்றிப்பை நாம் உண்மையாகவும் உறுதியாகவும் கடவுளின் தன்மையில் நம்புகிறோம்.
நமது வழியாகிய இயேசு, தந்தையிடம் செல்வதற்கான பாதையை திறந்ததுடன் தனது தூய ஆவியானவர் நம்மில் குடிகொள்ளவும் அவர் அனுப்பினார். தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும் புறப்படுபவருமான ஆவியானவர் நாம் கடவுளை அப்பா தந்தையே என அழைக்கச் செய்தார்.
நாம் வீட்டில் இருந்து ஞாயிறு இறைவழிபாட்டை கொண்டாடும் போது, நாம் தந்தை, மகன், தூய ஆவியானவரின் பெயரில் திருமுழுக்கு பெற்றிருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். தூய ஆவியானவரின் வல்லமையில், இயேசுக்கிறிஸ்து வழியாக கடவுள் நம்மைப் பாதுகாத்துள்ளார்.
தந்தை மகன் தூய ஆவியானவரினால் ஆசீர்வதிப்போம், அவருக்கே எல்லா ஆராதனையும் மாட்சியும் புகழும் என்றென்றும் இருக்கும். அத்துடன் ஒவ்வொரு முறையும், நம்முடைய செபங்களைத் தொடங்கும்போது, கடவுளின் ஆவியில் இயேசுக்கிறிஸ்து வழியாக விண்ணகத்தில் இருக்கும் தந்தையிடம் நாம் வேண்டுகிறோம். இயேசு கிறிஸ்து எப்போதும் நம்மிடையே இருக்கிறார் என்பதை இது காட்டுகிறது.
திரித்துவத்தின் புனித எலிசபெத் (1880-1906) மூவொரு கடவுளை “திரித்துவம்” அல்லது “என் திரித்துவம்” எனக் குறிப்பிட்டார். அவரது முழு ஆன்மிகமும் தனது இதயத்தை மூவொரு கடவுளுக்கு ஒரு இல்லமாக்குவதாகவே இருந்தது. கடவுள் நமது இதயத்தின் ஆழத்திலும் ஆன்மாவிலும் வாழ்கிறார் என்பதையும் அவர் நம்மை தனியாக விட்டுவிடமாட்டார் என்பதுடன் நமது வாழ்விலிருந்து யாரும் அவரை எடுத்துவிட முடியாது என்பதையும் அவர் இன்று நமக்கு நினைவூட்டுகிறார்.
அருள்தந்தை ஜோர்ஜ் பாக்கியசாமி
புனித யோசேப்பு ஆலயம்
செந்தூல்